வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் குத்துவெட்டு..!!

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அதன் அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்தே முடிவுகளை அறிவிக்கும் என்று ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பில் உள்ள அனைத்து அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்த பின்னரே அறிவிக்கும். அதுவே இறுதி முடிவாகவும் இருக்கும்.ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம் என்றார்.கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது;

நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் சம்மந்தன் ஐயாவை தலைவராக நான் தெரிவுசெய்தேன்.சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கும் போது, அதில் தான் இருக்கப்போவதில்லை என்று சிறிதரனின் பெயரை அவர் பரிந்துரைத்தார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் என்னுடைய பெயரை முன்மொழிந்ததால் சர்ச்சை ஒன்று உருவானது.இன்றுவரைக்கும் அதற்கு தீர்வை எட்டுகின்ற வாய்ப்பு கிட்டவில்லை.எந்த ஒரு கட்சியும் எல்லாவற்றையும் ஆளுமை செய்கின்ற வகையில் கூட்டமைப்பு இருக்கக்கூடாது.இப்படியான சிறிய விடயங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதை பிரதானமானவிடயமாக பார்க்கவேண்டும். ஜனநாயகம் என்பது அந்த மரபுகளுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கவேண்டும்.இதனை விரைவில் தீர்ப்பதற்கு சம்பந்தன் ஐயாவிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். ஆகவே அடுத்த நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலே இந்தவிடயத்தை ஆராய இருக்கிறோம். கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டு, எந்த ஒரு கட்சியும் அதிகாரத்தை செலுத்தும் நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது. மக்களின்விருப்பம் ஐக்கியம் அதனையே அனைத்து கட்சிகளும் விரும்புகிறது எனவும் ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.