வடக்கில் இன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 659 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.அதில், மன்னாரில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மன்னார் நகரில் சலூன் கடை நடத்துபவருக்கு கடந்த வாரம் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய தனிமைப்படுத்தலில் இருந்த நால்வருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மற்றுமொருவர், மன்னார் வைத்தியசாலையில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதேவேளை, யாழ்ப்பாணத்தில், கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்த ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர், கொழும்பில் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராகக் கடமையாற்றும் நிலையில், நவாலியில் வசிக்கும் ஆசிரியையாகக் கடமையாற்றும் அவரது மனைவிக்கு நேற்று தொற்று உள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே தொற்றாளராக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது, அவருக்குத் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.