இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்..!!

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பல்கலைகழக மாணவர்களுடன், சைவ, கிறிஸ்தவ மத தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார்.இந் நிலையில், அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் இணைந்து, வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவுதவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார்.அத்துடன் உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டும் என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையிலேயே, நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.