எத்தனை தடைகள் வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக்கி சிகரம் தொட்ட யாழ். குருநகர் மண்ணின் மைந்தன்..!! குவியும் வாழ்த்துக்கள்..!

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பண்பாட்டுக் கற்கைகள் முதுகலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்ட குருநகரின் முதலாவது பண்பாட்டுக் கற்கைகள் முதுகலைமாணிப் பட்டதாரியான அன்புச் சகோதரன் அல்பேட் பெஸ்ரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வு குறித்த ஏராளம் புகைப்படங்கள் இன்று சமூக ஊடகங்களில் அதிகம் வலம்வந்தன.அதிகம் பேசப்பட்டன.வெறுமனே முயற்சியுடன் படிக்காமல் இருந்து, சாக்குப் போக்கு சொல்பவர்களுக்கு, இந்தப் புகைப்படங்கள் ஒரு கதை சொல்லுமென நம்புகிறேன்.அது போல் ஒரு வெள்ளைக் கடதாசியில் ஒரு எழுத்தையேனும் எழுதாமல் பணத்தை வாரி வழங்கியும் அரசியல் சூட்சுமங்களாலும், பட்டங்களை வாங்கி விட்டு தமது பெயரின் பின்னாலோ முன்னாலோ தம்மைத்தாமே அலங்காரம் செய்பவர்களுக்கும், அவர்களின் அலங்காரங்களுக்கு லைக் மழைகளாலும், சுப்பர், நைஸ், கொங்கிறாச்சு லேசன், எனும் இடிமின்னல்களாலும் வாழ்த்துத் தெரிவிப்போருக்கும், இந்தப் புகைப்படம் நல்ல கதை சொல்லுமென நினைக்கின்றேன்.சாப்பாட்டுக்கு வழியின்றி, போட்ட ஆடைகளையே துவைக்காமல், மறுநாளும் போட்டு, கூலி வேலை செய்து உடல் அங்கங்கம் செயலிழந்து, போரின் வடுக்களுடனும் கூட இன்றும் மனம் உடைந்து போகாமல், தமது கூரிய இலட்சியத்துடன் போராடியே இவர்கள் இந்தப் பட்டத்தினை எடுக்கின்றனர்.அந்த வகையில் அன்புச் சகோதரன்அல்பேட் பெஸ்ரியன் அண்ணனுக்கு மேலும் கல்விப்பாதையில் சாதனையின் சிகரங்களை தொட உளமார வாழ்த்துகின்றேன்.ஆனால், இந்த சமூகம் கல்வி அறிவோ, சமூக சித்தாந்தங்களோ தெரியாதவர்களை அரசியல் வாதிகளாகவும், அதிகாரத்திலும் இருத்தி ,அழகு பார்க்கும் மடமைத்தனங்களால்,இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வேலையில்லா பட்டதாரிகளாயிருப்பரோ, அல்லது வேலை கிடைத்தும், திணைக்களங்களில் எடுபிடிபோல் கற்ற கல்விக்கேற்ப மரியாதை கிடைக்காமல் நடத்தப்படுவார்களோ தெரியாது.படிக்கும்போது, கற்ற கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பென படிக்கின்றோம்.அதற்குள் எத்தனை இரகசியங்கள் காத்திருப்புக்கள், அவமானங்கள், அலைச்சல்கள்..ஆனாலும், வாழ்வு போரியல் கூறுகளால் கட்டமைக்கப்பட்டதால், யாவற்றையும் வெல்வதை விடக் கடப்பதே மேல் என, மேல்நோக்கி நகர யாவர்க்கும் வாழ்த்துக்கள்.ஈழத்தமிழனின் போர்தந்தந்த காயங்களுக்கு சரியான மருந்தும் கல்வியேயன்றி வேறில்லை. ஆம் தமிழர்களின் சுபீட்சமான, விடியலுக்கான ஒரே அத்திவாரம் கல்வியே தான்.வாழ்த்துக்கள் சொந்தங்களே..

நன்றி:

கவிஞர் T செல்வா -முகநூலிலிருந்து