வடக்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கப் போகும் பாரிய நெருக்கடி..!! ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட அவசர மடல்..!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார் 7000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.குறித்த கடிதத்தில் மேலும்; 2009இற்கு பின்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டன.குறிப்பாக ஹலோ ட்ரஸ்ட், சார்ப்டாஸ் போன்ற நிறுவனங்கள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிறுவனங்களில் அன்று தொடக்கம் இன்றுவரை சுமார் 7000 இற்கு மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் பணியாற்றி வருகின்றார்கள்.இது இந்த மாவட்டங்களின் சனத் தொகையில் மிகப் பெரியது. ஆனால், வருகின்ற 2022 உடன் கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதால், இதில் பணியாற்றிய 7000 இற்கு மேற்பட்டவர்கள் தங்களின் தொழில் வாய்ப்பினை இழக்கின்றனர்.இதனால், அவர்களின் குடும்பங்களில் வாழ்வாதாரம் இழக்கப்படுகிறது. இந்த நிலைமை மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக பின்னடைவை ஏற்படுத்தும்.மேற்படி தொழில் வாய்ப்பினை இழக்கும் 7000 இற்கு மேற்பட்டவர்கள் தொழிலின்றி சமூகத்தில் காணப்படுகின்ற நிலைமையானது ஆபத்தானது. அதனால் பல்வேறு சமூக,பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படும்.
எனவே தாங்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் இவர்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.