யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா கண்டறிவைத் தொடர்ந்து வருகை தந்த சிறப்புக்குழு!!

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ வல்லுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பாக யாரும் அச்சமடையத் தேவையில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்,மருத்துவர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கையில், “நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, நடைபெற்ற மருத்துவ வல்லுநர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடையூறுகளின்றி நடைபெறுகின்றன. அத்துடன், கண்காணிப்பை மேற்கொள்வதற்குச் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.மருத்துவர், நோயாளிகளைப் பார்வையிடுவது தொடர்பாக சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன” குறிப்பிட்டுள்ளார்.