பெரும்திரளான பொதுமக்களின் பங்கேற்புடன் கோப்பாயில் நடந்த அமரர் செந்தூரனின் இறுதி நிகழ்வுகள்…!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) முக்கிய உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினருமாகிய அமரர் செந்தூரனின் இறுதி நிகழ்வுகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பெரும் திரளான பொதுமக்கள் முன்னிலையில் கோப்பாயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் சற்று முன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளார் கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், உட்பட பெரும் திரளான ஆதரவாளர்கள், மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து, அன்னாரது பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கோப்பாய் இந்து மயானத்திற்கு சற்று முன்னர் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று முன்தினம் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த செந்தூரன், நேற்று அதிகாலை தொண்டமனாறு கடற்கரைப்பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.