பொத்துவில்-பொலிகண்டிப் பேரணி..சட்டத்தரணி சுமந்திரன் எம்.பியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இன்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக் கொண்டிருந்த பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையிலேயே, கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சுமந்திரன் தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன் உள்ளிட்டோரிடம் இதுவரையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.