கொரோனாத் தடுப்பூசி யார் யாருக்கு ஏற்றக்கூடாது?

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுமக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் எந்தெந்தத் தரப்புக்கு கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்படாது அல்லது அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடாது என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்படாது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர் அப்பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்படலாம். அத்துடன், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படாது. அதேபோல பாலுட்டும் தாயாக இருந்தால் குழந்தை பிறந்து 6 மாதங்கள்வரை தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இப்பிரிவினர் குறித்தும் இன்னும் ஆய்வு இடம்பெறவில்லை. 6 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசியை பெறுவதற்கு தகுதிபெறுவர்.

அதிகளவு ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்த்துக்கொள்வதே நல்லது. கொரோனாத் தடுப்பூசி 2 கட்டங்களாக ஏற்றப்படும். எனவே, முதற்சுற்றில் தடுப்பூசி ஏற்றப்பட்டு, அதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் இரண்டாவது டோஸை பெறக்கூடாது.

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருப்பவர்கள் தடுப்பூசியை பெறமுடியாது. குணமடைந்து இரு வாரங்களின் பின்னர் பெற்றுக்கொள்ளலாம் – என்றார்.

அதேவேளை, கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் சுகாதார ரீதியிலான அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனரே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வைத்தியர் தேஷாஹினி ஹேரத்,

“நானும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டேன். நலமாக இருக்கின்றேன். கொரோனாத் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு சிற்சில உபாதைகள் ஏற்படக்கூடும். ஊசி ஏற்றப்படும் இடம் சிவப்பு நிறமாகலாம், அந்த இடத்தில் வலி ஏற்படலாம். சிலவேளை சிறு அளவில் காய்ச்சல் ஏற்படக்கூடும். நடுக்கம் ஏற்படலாம். சிலருக்கு உணவு அருந்த முடியாது, வாந்தியும் வரக்கூடும். ஆனால், இரு நாட்களில் இயல்புநிலைக்கு வந்துவிடும்.