நாளை முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போக்குவரத்துத் திணைக்களம்..!!

கோவிட் – 19 வைரஸ் காணப்படுகின்ற காலப்பகுதியில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தமது சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இவ்வாறு மீளவும் சேவைகளை ஆரம்பிக்கும்போது கோவிட்-19 வைரஸ் மேலும் பரவக்கூடிய ஆபத்து ஏற்படாத வகையில், அலுவலக சூழலினதும், தமதும், மக்களுடையதும் பாதுகாப்பை ஆகக்கூடிய மட்டத்தில் பேண வேண்டியது அனைவரதும் பொறுப்பு என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.அதனடிப்படையில், இதற்கு ஏற்புடைய விதத்தில் ஜனாதிபதி செயலகத்தைப் போன்றே சுகாதார அமைச்ன் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கீழே காட்டப்பட்டுள்ள விதத்தில் எமது சேவைகளை 2020 ஏப்ரல் 27ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது.அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமையவும் சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றியும் ஆகக்குறைந்த ஊழியர்களை கொண்டு சேவைகள் வழங்கப்படுவதால் வரையறுக்கப்பட்ட விதத்திலேயே சேவைகளை வழங்க முடியும் என்பதை கவனத்திற் கொள்க.அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு முன்னரே ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொண்ட பின்னர் மட்டுமே வருகை தருதல் வேண்டும். முன்னரைப் போன்று பொதுமக்கள் தமது விருப்பத்திற்கமைய வந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் இந்நிலைமையின் கீழ் முடியாது என்பதையும் தயவுடன் அறிவிக்கின்றேன்.திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு அலுவலகம் மற்றும் ஒவ்வொரு சேவைகளுக்கும் வெவ்வேறாக தொலைபேசி இலக்கங்கள் எம்மால் இத்துடன் வெளியிடப்படுகின்றது. இத்தொலைபேசி இலக்கங்களுக்கு வார நாட்களில் மு.ப.9.00 தொடக்கம் பி.ப.4.00 மணி வரை அழைப்பதன் ஊடாக உரிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள முடியும். இத்தகைய சேவையை தங்களது கைத் தொலைபேசி மற்றும் இணையத்தளம் ஊடாக மேற்கொள்வதற்கு எதிர்வரும் காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அனைத்து திகதிகள் மற்றும் நேரங்களை ஒதுக்கும் செயற்பாடானது ‘முதல் வந்தவர்களுக்கு முதலில் சேவைகளை வழங்குதல்’ என்ற அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளப்படும்.

அவ்வாறே மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து சேவைகள் இன்னமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும் நபர்களுக்கு மாத்திரமே சேவைகள் வழங்கப்படும்.இந்தச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் அனைவரும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பதத்திரத்தில் ஒன்றை சமர்ப்பித்தல் கட்டாயம் என்பதுடன் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள விதத்தில் சிறந்த உடலாரோக்கியத்துடனும் முகக் கவசங்களை அணிந்தும் வருதல் கட்டாயமானதாகும். அவ்வாறு வராத சேவைபெறுநர்கள் முன்னரே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியிருந்தாலும் மீண்டும் திருப்பியனுப்பப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.தொற்றுநோய் தாக்கம் காணப்படுகின்ற இத்தகைய நிலைமையிலும் நாம் பொதுமக்களுக்கு எமது சேவைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் எம்முடையதும், உங்களுடையதுமான பாதுகாப்பின் பொருட்டு விதிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய, செயற்பட்டு எமது சேவைகளை உயர்ந்த பட்சத்தில் தங்களுக்கு வழங்குவதற்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதை நாம் நிச்சயம் நம்புகின்றோம் என அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்பிரகாரம் யாழ் மாவட்ட போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தை வார நாட்களில் அலுவலக நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கமாக 077 145 7026 / 077 613 0916 என்பவை வழங்கப்பட்டுள்ளன.