இலங்கையில் மிக விரைவில் வரவிருக்கும் தடை !

நாட்டில் சில்லறையாக சிகரட் விற்பனை செய்வதையும், 160 மில்லி லீற்றர் மதுபான போத்தல்களை விற்பனை செய்வதை தடுக்கும் சட்டங்களை உருவாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஸ கூறியிருக்கின்றார்.


சில்லறை விலைக்கு சிகரட்களை பெறுவோரின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்வதை கருத்திற்கொண்டு, சில்லறை விலைக்கு சிகரட்களை விற்ப​னை செய்வதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சிகரட் பக்கெட் ஒன்றில் குறைந்தது 20 சிகரட்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனூடாக, சிகரட் பாவனையாளர் ஒருவர் சில்லறை விலைக்கு சிகரட்டை கொள்வனவு செய்ய முடியாமல் போகும் என்பதுடன், 20 சிகரட்களை ஒன்றாகக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, இதற்காக செலவிடப்படும் தொகை அதிகம் என்பதால், சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கையை இயலுமானவரை குறைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் சிகரட் பாவனையினால் நாளாந்தம் 60 பேரும் மதுபான பாவனையினால் நாளாந்தம் 55 பேரும் உயிரிழப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.