வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு குளியலறையிலிருந்து பேசும் துபாய் இளவரசி..!! (வெளியாகியுள்ள அதிர்ச்சிக் காணொளி)

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தவுமின் மகளும், இளவரசியுமான ஷேகா லதிபா (Sheikha Latifa) வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் இளவரசிகளில் ஒருவருமான ஷேகா லதிபா , கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எமிரேட்ஸில் இருந்து அவருடைய நண்பரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான டீனா ஜஹியைனன் (Tiina Jauhiainen) என்பவருடன், ஐக்கிய அரபு அமீரக எல்லையை காரில் கடந்து ஓமனுக்கு சென்றுள்ளனர்.அதன் பின்னர், அங்கிருந்து இருவரும் கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தப்பித்து சென்ற போது, கோவா அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இரண்டு வாரங்களுக்கு பிறகு, டீனாவை மட்டும் விடுவித்தனர்.அதன் பின்னர், லதிபா குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில் பேசிய லதிபா, தான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து விடுதலை பெற ஆசைப்படுவதாகவும், இங்கிருந்து நான் விடுவிக்கப்படும் போது எப்படி இருப்பேன் என்று எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.இவை அனைத்தையும் குளியலறை ஒன்றில் இருந்து லதிபா தெரிவிக்கும் நிலையில், இந்த வீடியோ ஓராண்டுக்கு முன் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, லதிபா சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டின் போது டீனாவிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது, தான் சந்தித்து வரும் இன்னல்கள் அனைத்தையும் லதிபா தெரிவித்துள்ளார்.இந்த அழைப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அழைப்பு நின்று போயுள்ளது. இதனால், அவர் தனது பிரச்சனைகள் குறித்து பேசிய வீடியோவை, தனது நண்பரின் துக்கத்திற்கு தீர்வு காண வேண்டி, உலகத்தின் பார்வைக்காக டீனா தற்போது வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ, தற்போது உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தாம் தொடர் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும், உயிருடன் இருப்பேனா அல்லது அதைவிட கொடூரமாக குற்றுயிராக விடப்படுவேனா தெரியாது என கூறும் அவர்,ஐக்கிய அமீரகத்தின் முற்போக்கு நடவடிக்கைகள் அனைத்தும் கபட நாடகம் எனவும் லதிஃபா தெரிவித்துள்ளார்.தற்போது இளவரசி லதிஃபா துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் ரகசிய சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா என்பதை அங்குள்ள அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால், மன்னராட்சி நடைபெறும் துபாய் போன்ற இஸ்லாமிய நாட்டில் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு எல்லை வரையே அனுமதி அளிக்கப்படும்.இளவரசி லதிஃபா தப்பிச்செல்ல உதவிய அவரது பெண் நண்பர் மற்றும் பிரான்ஸ் முன்னாள் உளவாளி என இருவரும் தற்போது துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.