நாட்டை முடக்கி பொருளாதாரத்தை இழக்கத் தயாரில்லை..கொரோனாவுடன் வாழப் பழகுங்கள்.!! பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் இலங்கை அமைச்சர்..!!

நாட்டை மீண்டும் முடக்குவதற்கான பொருளாதார ரீதியிலான சக்தி இல்லை. அதனால் நாட்டை முடக்காது சவால்களை எதிர்கொள்வதே அரசின் திட்டம் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். நேற்று நடத்தப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வீரியம் மிக்க புதிய வகையான கொரோனா வைரஸ் பரவலால் நாட்டை முடக்கும் எண்ணம் உள்ளதா? என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது;ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் 13 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு ‘லொக் டவுண்’ செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 4 தடவைகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலும் இரண்டரை மாதங்கள் நாடு முடக்கப்பட்டிருந்தது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. லட்சக்கணக்கானவர்கள் தொழில்களை இழந்தனர். இலங்கை போன்ற அதிக கடன் சுமைகள் உள்ள நாட்டில், நாட்டைத் தொடர்ந்து முடக்கி வைப்பதற்கான பொருளாதார ரீதியிலான வலு எம்மிடம் இல்லை.எனவே, நாட்டை முடக்காமல் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதே அரசின் திட்டமாக இருக்கின்றது. கொரோனா வைரஸூடன் வாழப் பழக வேண்டும்.ஐ.டி.எச். மருத்துவமனையில்தான் அதிகளவு கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சைபெறுகின்றனர். அங்கு பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை. உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா தொற்றாது – என்றார்.