முகத்தை முழுமையாக மூடிய முகக் கவசங்கள் தொடர்பில் இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியும் உந்துருளி செலுத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, சட்டமா அதிபரால் காவல்துறைமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளது.

வெல்லவாய பகுதியை சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட நகர்த்தல் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் பாரிந்த ரணசிங்க குறித்த விடயத்தை அறிவித்துள்ளார்.முழு முக பாதுகாப்பு தலைக்கவசத்தை அணிந்து பயணித்ததாக குற்றம்சாட்டி, வெல்லவாய காவல்துறையினரால் தமக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.2017 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க உந்துருளி பாதுகாப்பு தலைக்கவச விதிமுறைகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், இந்த விதிமுறைகள் உரிய முறையில் நாடாளுமன்றின் அனுமதியை பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த மனுதாரருக்கு எதிராக வெல்லவாய நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை மீளப்பெறுமாறு, சட்டமா அதிபரால் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் பாரிந்த ரணசிங்க மன்றில் அறிவித்துள்ளார்.