வேண்டுதல்கள் செய்வோருக்கு நல்வாழ்வைத் தரவல்ல மாசி மாதப் பிறப்பின் மகிமை..!!

மாசி மாதப் பிறப்பில், சனிக்கிழமையில், காகத்துக்கு எள் சாதமிடுவோம். முன்னோர் ஆசியும் கிடைக்கப் பெறலாம். கிரக தோஷங்களும் விலகும். சனி பகவானின் கருணைக்குப் பாத்திரமாவோம். சனீஸ்வரரின் அருளைப் பெறுவோம். மாசி மாதத்தை மகத்துவம் நிறைந்த மாதம் என்கிறது சாஸ்திரம். மாசி மாதத்தில் புனித நீராடுதல் என்பது மிக முக்கியம்.மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி இரண்டுமே விசேஷமானவை. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் விசேஷம்.எல்லா மாதங்களிலும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரியை, மகா சிவராத்திரி என்று போற்றுகிறோம். கொண்டாடுகிறோம். வழிபடுகிறோம்.மாசி மாதப் பிறப்பில், நாம் செய்யும் முன்னோர் வழிபாடுகள் மிகுந்த பலன்களைத் தரக்கூடியவை. சந்ததி பலம் தரக்கூடியவை. சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக்கூடியவை. ஒவ்வொரு மாதப் பிறப்பும் பித்ருக்களுக்கானவைதான். பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவைதான் என்றபோதும் மாசி தமிழ் மாதப் பிறப்பு கூடுதல் மகத்துவங்களைக் கொண்டது.தை மாதம் நிறைவுறுகிறது. இன்றைய தினம் 13ஆம் திகதி மாசி மாதம் பிறக்கிறது. மாசி மாதம் பிறக்கும் கிழமையானது சனிக்கிழமையில் அமைந்திருக்கிறது. இன்னும் கூடுதல் சிறப்புக்கு உரியது என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.சனிக்கிழமையும் மாசி மாதப் பிறப்பும் கூடிய சுப தினத்தில், வழிபாடுகள் மேற்கொள்வது மிக மிக உன்னதமானவை.முன்னோர் வழிபாடு மிக மிக அவசியம். பித்ருக்காரியங்கள் செய்வதும் பித்ருக்களை வணங்குவதும் மும்மடங்கு பலன்களைத் தந்தருளக் கூடிய மாதம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.அதேபோல், சனிக்கிழமையும் மாதப் பிறப்பும் இணைந்து வந்துள்ளதும் சிறப்புக்கு உரியது. முன்னோர்களுக்கு வழிபட்ட பிறகு, படையலிட்ட பிறகு, உணவை காகத்துக்கு வழங்குவோம். காகம் என்பது முன்னோர்களின் சாயல் என்றே தெரிவிக்கிறது சாஸ்திரம்.அதேபோல், சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். காகத்துக்கு உணவிடுவது சனீஸ்வர தாக்கத்தில் இருந்து விடுபடச் செய்யும் என்பார்கள். காகத்துக்கு உணவிடுவது முன்னோர்கள் சாபத்தில் இருந்து விடுபடச் செய்யும் என்பார்கள். எனவே இந்த இரண்டுக்கும் உகந்ததாக, சனிக்கிழமையும் மாசி மாதப் பிறப்பும் அமைந்திருக்கிறது.எனவே, இன்றைய தினம் 13ஆம் திகதி சனிக்கிழமையும் மாதப் பிறப்பும் இணைந்த அற்புதமான நாளில், முன்னோரை வணங்குவோம். நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானை வேண்டுவோம். காகத்துக்கு எள் கலந்த சாதத்தை வழங்கி பிரார்த்திப்போம்.நம் பிரார்த்தனைகளையெல்லாம் சனீஸ்வரரும் நம் முன்னோர்களும் நிறைவேற்றித் தருவார்கள் என்பது உறுதி!