ஆட்களே இல்லாத தனித்தீவில் கொடி மாதிரித் தெரிந்த கூடாரம்..!! விமானத்திலிருந்து இறங்கிப் பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கடற்படை விமானம் ஒன்று ரோந்து பணிக்கு சென்றிருந்த பணியில், ஆள் நடமாட்டமில்லாத தீவு ஒன்றில் அவர்கள் கண்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மூன்று பேர், தனி படகின் மூலம் பஹாமாஸ் பகுதிக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், திடீரென இவர்கள் சென்ற படகு, எதிர்பாராதவிதமாக, கவிழ்ந்துள்ளது.இதன் காரணமாக, அவர்கள் மூவரும், அங்கியுலா கேய் (Anguilla Cay) என்னும் ஆள் அரவமற்ற பாலைவன தீவில் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அந்த மூவரும், அங்கு உயிர் பிழைக்க வேண்டி, தேங்காய்கள், எலியின் கறி, சங்குக்கறி உள்ளிட்டவற்றை உண்டு நாட்களை கழித்து வந்துள்ளனர்.இதனிடையே, சில தினங்களுக்கு முன் அமெரிக்க கடலோர காவல் படை, பஹாமாஸ் பகுதியில் விமானம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கியுலா தீவில் இருந்து யாரோ ஒருவர் கொடியசைப்பதை விமானி கண்டு அதிர்ந்து போயுள்ளார். தொடர்ந்து, அருகே சென்று பார்த்த போது தான், மூன்று மனிதர்கள் அங்கு நிற்பது தெரிய வந்தது.உடனடியாக, இதுகுறித்த தகவலை மற்ற அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில், அந்த மூவரையும் மீட்க வேண்டி, ஹெலிகாப்டர் மூலம் ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் தொடர்பு கொள்ள வேண்டி ரேடியோ கொடுக்கப்பட்டது.வானிலை காரணமாக, உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை. இதனால், ரேடியோ மூலம் அவர்களிடம் உரையாடினர். அப்போது தான் மூவரும் ஒரு மாதத்திற்கும் மேலாக இங்கே சிக்கித் தவித்து வருவது தெரிந்தது.மறுநாளே, அவர்களை பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர், மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு, எந்தவித ஆபத்தும் இல்லை என தெரிய வந்த பின்னர், மூவரையும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.