இடைக்காலக் கொடுப்பனவுகளுக்கு தீர்வு வழங்காவிடின் 20ஆம் திகதி முதல் மாபெரும் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள்!!

அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியபடி சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவை இம்மாதம் 20ம் திகதிக்கு முன்னர் வழங்காவிட்டால், மார்ச் மாதத்தில் பாரிய பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த அதிபர், ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்க தலைவர் பிரியந்த பெர்ணாந்து கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கும் போது , ஆசியர்களின் இடைக்கால கொடுப்பனவு தொடர்பாக கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து ஏற்படுத்தப்பட்ட இந்த அநியாயம் தொடர்பாக பல்வேறு சந்தப்பங்களில் அரசாங்கங்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கி இருந்தன.தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர், சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவு திட்டத்தின் மூலம் இதற்காக தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து வாக்குகளை பெற்றுக்கொண்டது.அத்துடன், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படும்வரை ஜனவரியில் இருந்து இடைக்கால கொடுப்பனவு ஒன்றை வழங்குவதாக இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான டலஸ் அலகப்பெரும,பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் பாராளுமன்றத்திலும் இதுதொடர்பாக வாக்குறுதியளித்திருந்தனர். அது ஏமாற்றமாகும்.கொவிட்19 தொற்று நிலைமை காரணமாக நாங்கள் இதுதொர்பாக மெளனம் காத்தோம். என்றாலும், இதன் பிறகும் ஆசிரியர்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்கமாட்டோம். தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்கள் தயாரும் இல்லை. அதனால் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்வரும் 20ஆம் திகதிவரை காலம் வழங்குவதற்கு ஆசிரியர் சங்கங்கள் ஏகமனதாக தீர்மானித்திருக்கின்றன.அத்துடன் இதன் ஆரம்ப நடவடிக்கையாக, இந்த மாதத்தில் இருந்து மாவட்ட மட்டத்தில் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்க இருக்கின்றோம். அதன் முதலாவது ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி அனுராதபுரத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம் எனவும் ஆசிரியர் சங்க தலைவர் பிரியந்த பெர்ணாந்து கூறியுள்ளார்.