பொத்துவில்- முதல் பொலிகண்டி வரை நடந்த மக்கள் பேரெழுச்சிப் பேரணி.. இரண்டு முடிவிடங்களுக்கு காரணம் யார்..?

தமிழினத்தின் ஒற்றுமையை காண்பிக்க ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சில்லறை சர்ச்சைகளுடன் முடிந்துள்ளது. பேரணி ஒற்றுமையாக நகர்வதைப் போல தோன்றினாலும், உள்ளே மோதல் நிலவுவதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. அதன்படி, முறையான திட்டம், சக கட்சிகள், மனிதர்களை அங்கீகரிக்கும் மனப்பக்குவமற்ற தன்மைகளினால் விமர்சனங்களின்றிக் கொண்டாடப்படப் பட்டிருக்க வேண்டிய போராட்டம் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
இந்த குழப்பத்தையே இனிமேல் அரசும், சிங்கள தரப்பும் சுட்டிக்காட்டி, எள்ளிநகையாடும் நிலைமையேற்பட்டுள்ளது.

ஒரு உன்னதமான போராட்டம் நடந்து முடிந்த கையுடன் அதன் விமர்சனங்களை எழுதுகிறார்களே என யாராவது யோசிக்ககூடும். ஆனால், அப்படி யாரும் எழுதாமலிருப்பதற்கான வாய்ப்பை ஏற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் வழங்கவில்லை.இந்த போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒருமித்த தன்மை நிலவவில்லை.போராட்டத்தின் ஆரம்பத்திற்கு பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் தப்பினர் செயற்பட்டிருந்தனர். ஏற்பாட்டு குழு கூட்டங்களிலும் யாழ்ப்பாணத்தில் அனைத்து கட்சிகளும் அழைக்கப்படவில்லை. இதனால் ஆரம்பத்திலேயே-தமிழ் தரப்பில் கணிசமான தரப்பை பின்தள்ளவைக்கும் ஒரு நிகழ்ச்சி திட்டம் நடக்கிறதோ என்ற ஐயம் கட்சிகளிற்குள் பரவலாக எழுந்து விட்டது.போராட்டத்தின் தொடக்கத்திலும் தமிழ் அரசு கட்சி- சுமந்திரன் தரப்பு முன்னிலை வகித்தது.போராட்டத்தை தமது வாய்ப்பிற்காக அவர்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள் என மற்றைய அரசியல் கட்சிகள் கருதின. அனைவரும் கலந்து கொள்ளும் போராட்டத்தின் தனிப்புகழ் சுமந்திரன் அணிக்குச் செல்வதை விரும்வில்லை. சிவில், மத பிரதிநிதிகளின் ஊடாக அவர்கள் காய் நகர்த்த, மோதல் வெடித்தது.இந்த போராட்டத்தின் முதல் இரண்டு நாளில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் அதிகளவில் முன்னிறுத்தப்பட்டனர்.இரு தரப்பின் திரைமறைவு மோதல், மூன்றாம் நாளில் திருகோணமலையில் சர்ச்சையாக வெடித்தது.பேரணியின் முடிவிடம் வடமராட்சி. சுமந்திரனின் ஏரியா. யாழில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்த போது, முடிவிடமாக ஒரு இடத்தை சிவாஜிலிங்கம் பரித்துரைத்தார். ஆனால், முடிவிடத்தை யாரும் தீர்மானிக்க முடியாது, தாமே அதை தீர்மானிப்போம் என ஏற்பாட்டாளர்கள் என கூறிக்கொண்டவர்கள் தெரிவித்து விட்டனர்.இப்படி ஏராளம் சின்னச்சின்ன முரண்பாடுகள் முற்றி, கடைசியில் கவிழ்த்துக் கொட்டியுள்ளனர்.இந்த விபரீதத்தில் வேலன் சுவாமிகள் தரப்பில் தவறா, சுமந்திரன் அணியின் தரப்பில் தவறா என்பது விவாதமல்ல. இந்த விபரீதத்திற்கு இரண்டு தரப்பினரும் சம அளவில் பொறுப்பெடுக்க வேண்டும்.ஒரு மக்கள் எழுச்சியை பொறுப்பற்ற விதமாக கையாண்ட வரலாற்றுத் தவறுக்கு இரண்டு தரப்பினரும் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும்.தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசிய கட்சிகளை விட்டு வெளியில் செல்லும் நெருக்கடியான காலகட்டத்தில், இந்த எழுச்சியில் கணிசமான இளையவர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களை உணர்வுடன் ஓரணியில் திரட்டக் கிடைத்த வாய்ப்பை சில்லறை மோதலால் இரண்டு தரப்பும் நழுவவிட்டுள்ளனர்.இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட கணிசமான இளையவர்கள்- முதல் தடைவையாக போராட்ட களத்திற்கு வந்தவர்கள் கணிசமான அதிருப்தியில் உள்ளனர். அதற்கான பொறுப்பை இரண்டு தரப்பும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி:தமிழ்ப் பக்கம்