இலங்கையின் மத்திய பகுதி மாவட்டமொன்றில் மீண்டும் மிரட்டும் கொரோனா..!! ஒரே நாளில் 197 பேருக்குத் தொற்று..!!

நேற்றைய தினம் (06) 197 கொவிட் தொற்றாளர்கள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தை தவிர்ந்த வெளி மாவட்டம் ஒன்றில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ள தொற்றாளர்களில் 185 பேர் ரிதீமாலியத்த பிரதேசத்தின் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இன்று (07) காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 726 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 68,576 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.இவர்களில், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 116 பேரும், பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 197 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 101 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 63 பேரும், குருணாகலை மாவட்டத்தை சேர்ந்த 88 பேரும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 51 பேரும் மற்றும் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த 22 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 1,133 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,594 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5,631 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்வடைந்துள்ளது.