பொத்துவில்- பொலிகண்டிப் பேரணியின் இறுதி நாள் நாளை..வரலாறு சொல்லும் வகையில் தமிழர்களை அணிதிரள அழைப்பு..!!

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி முடிவில் வரலாறு சொல்லும் வகையில் ஒரணியில் யாழில் தமிழர்கள் அணிதிரளும்படி தமிழர் சம உரிமை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ஆன்மீக, சமூக, அரசியல் தலைவர்கள் உட்பட பல்லாயிரக் கனக்கான மக்கள் கடந்த நான்கு நாட்களாக தமிழர் தாயகத்தின் தென்முனை பொத்துவிலில் ஆரம்பித்து உணர்வு எழுச்சி பேரணியாக பல நூற்றுக்கணக்கான மைல்கள் பங்கு கொண்டுள்ளனர்.

பல்வேறுபட்ட இடர் நிலைகளையும் தாண்டி இப்பேரணி மகத்தான மக்கள் திரளுடன் இன்று இரவு கிளிநொச்சியை வந்ததடைந்து இருக்கின்றது.கிழக்கிலும் வவுனியா மன்னார் மாவட்டங்களிலும் சகோதர தமிழ் பேசும் மக்களும் அணிதிரண்டு பேரணிக்கு வலுச் சேர்த்து இருக்கின்றார்கள்.தற்போது தமிழர்கள் முற்று முழுதாக வாழும் யாழ்ப்பாணமும் கிளிநொச்சி மிகப்பெரிய மக்கள் வெள்ளத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக உலகிற்கு காட்ட வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.இன்று எம் இனத்தின் பூர்வீக மரபுரிமைகள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டு கொண்டு அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு, அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறையில் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றுக்காக அணி திரண்டு இரவு பகல் பாராது வந்து கொண்டிருக்கும் எமது அன்புக்குரிய உறவுகளின் உணர்வு உச்சம் தொட்டு நிற்கின்றது.இந்த தருணத்தில் இந்த உணர்வுகளுக்கு தியாகங்களுக்கு மதிப்பளித்து தாங்களால் முடிந்த அனைத்து தமிழர்களும் யாழ் – கிளிநொச்சி வீதிகளில் இறங்கி ஒட்டுமொத்த குரலையும் அடக்குமுறைக்கு எதிராக ஒலிக்க விட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த வரலாற்று கடமையை செய்ய அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நாளை அணி திரள்வோம்.நாளை காலை 7 மணிக்கு கிளிநொச்சி நகரிலோ அல்லது பின்னர் பளை, சாவகச்சேரி, யாழ் நகரிலோ முடிந்த இடங்களில் இணைந்து,பொலிகண்டியில் விண்ணதிர வட -கிழக்கு, மலையக தமிழர்களும் சகோதர தமிழ் பேசும் மக்களும் உலகிற்கு எம் மனக்காயங்களை வெளிப்படுத்துவோம்.