பொத்துவில் முதல் பொலிகண்டி வரை..தடைகளைத் தகர்த்தெறிந்து திருமலை மண்ணில் கால்பதித்த எழுச்சிப் பேரணி..!!

திருமலை – குமாரபுரம் படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண் பேரணியில் கலந்து கொண்டு, சுடரேற்றி, அகவணக்கம் செலுத்திவிட்டு பேரணியில் இணைந்து கொண்டுள்ளார். முதலாம் இணைப்பு:பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் இனத்திற்கு நீதிகோரிய போராட்டம் இரண்டாவது நாளாக இன்றையதினமும் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றது.இந்த நிலையில், தற்போது குறித்த பேரணி திருமலை நோக்கி நகர்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.மட்டக்களப்பு, திருகோணமலை – வெருகல் எல்லையில், போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக தமிழ் பற்றாளர்கள் பலர் இணைந்து கொண்ட நிலையில் போராட்டம் மேலும் எழுச்சியுடன் முன்னேறி செல்கின்றது.
இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் என பலர் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்,மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் உள்ளிட்ட அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்தப் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.