இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள புதிய தடை..!! வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி!

இலங்கையில் கொரோனா பரவலின் அச்சம் தொடர்ந்து வரும் நிலையில் சுகாதார பரிந்துரைகளின் படி முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி என்பன கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.இந்த நிலையில் கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer) பாவனையும் இந்த கட்டாய சுகாதார பரிந்துரைகளில் ஒன்றாக காணப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கை சுத்திகரிப்பான் தொடர்பான தடையொன்று இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் (NMRA) பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான் இறக்குமதி மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் இன்று முதல் தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தடை தொடர்பான அறிவித்தலானது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அண்மையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான்களை விற்பனை செய்வதோ, உற்பத்தி செய்வதோ, களஞ்சியப்படுத்துவதோ, விநியோகிப்பதோ, விற்பனைக்காக காட்சிப்படுத்துவதோ, விற்பனைக்காக வெளிப்படுத்துவதோ, விற்பனைக்கு கோரவோ, மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவே விற்பனை செய்யவோ முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சுத்திகரிப்பானுக்கு NMRA இனால் வழங்கப்பட்ட பதிவு இலக்கமானது, கை சுத்திகரிப்பான் பொதியில் அல்லது கொள்கலனில் தெளிவாக விளங்கக்கூடிய வகையில், காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.