கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி பணியை தொல்லியல் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதை போல, அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவம், பொலிசார், பிக்குகள் ஈடுபட்டுள்ளனர்.நேற்று (30) அங்கு இராணுவம், பொலிசார், பௌத்த பிக்கு ஆகியோர் சென்றுள்ளனர்.
சுமார் 3,500 வருடங்களிற்கும் முந்தைய தொன்மையுடையதாக கருதப்படும் இந்த ஆலயத்தின் சிவலிங்கம், அருகிலிருந்த தொன்மைமிக்க இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்டு, ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயத்திலும் பௌத்த சின்னங்கள் இருப்பதாக கூறி, சிங்களத் தரப்பினர் அண்மைக்காலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்ய தொல்லியல் திணைக்களம் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அளவீட்டு பணிகள் முடிந்ததும், தொல்லியல் ஆய்விற்கான மதிப்பீட்டு பணிகள் நடக்கவிருந்தன.எனினும், தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்களை குறிவைப்பதற்கு எதிராக பரவலான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதையடுத்து, யாழ்ப்பாணத்திலுள்ள தொல்பொருள் திணைக்களத்தினர் உருத்திரபுரம் பகுதிக்கு செல்லாமலே, ஏற்கனவே மேற்கொள்ள அளவீட்டின் அடிப்படையில் மதிப்பீட்டை முடித்து, கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனால், விரைவில் அங்கு தொல்பொருள் திணைக்களம் தனது நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை பௌத்த பிக்குவொருவர் உருத்திரபுரம் சிவன் கோயில் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். நுவரெலியாவிலிருந்து வருவதாக கூறிய அவர், பொலிசாரின் பாதுகாப்புடன் அங்கு சென்று, சிவலிங்கம் மீட்கப்பட்ட தொன்மையான சிதைவு பகுதியை பார்வையிட்டார்.பிக்கு சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர்-மாலை 4.30 மணியளவில் கூழாவாடி இராணுவ முகாமிலிருந்து 5 வாகனங்களில் இராணுவத்தினர் ஆலயப் பகுதிக்கு சென்றனர்.
அவர்களும் தொல்பொருள் முக்கியத்துவமுள்ள பகுதியைப் பார்வையிட்டனர். பின்னர், அருகிலுள்ள குளப்பகுதிக்கு சென்று, வரைபடங்களையும் பரிசோதித்தனர்.பின்னர் அங்கிருந்து கரடிப்போக்கு சந்திக்கு சென்றனர்.கடந்த தைப்பூசத்திலன்று, உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கான வளைவை கரடிப்போக்கு சந்தியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த அடிக்கல்லையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர்.அந்தப் பகுதி மக்களிடமும் துருவிதுருவி விசாரணை செய்தனர்.குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் ஆதிசிவன் ஐயனாரின் சூலத்தை முறித்து எறிந்ததை போல, உருத்திரபுரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாமென்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.