பார்ப்போரை மிரள வைத்த சாமியாரின் மிளகாய் அபிஷேகம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் உள்ள பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு சாமியார் மீது கார மிளகாய் அபிசேகம் செய்த சம்பவம் பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் பிறந்த நாள் தைப்பூச விழாவாக உலகத் தமிழர்களால் வருடந்தோறும் வெகு விமரிசையாக, பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் பாத யாத்திரையாக முருகனின் சந்நிதிக்கு செல்வது வழக்கம்.அத்தோடு பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகில் வேல் குத்தி செல்லுதல், வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணையில் வடை சுடுதல் என பல விதமான முறைகளில் கடவுள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்து வழிபடுவர்.இந்த வருட தைப்பூசத் திருவிழா தமிழகம் உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் பாலதண்டாயுதபானி என்ற முருகன் திருக்கோயில் உள்ளது. பிரசத்தி பெற்ற இந்த கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பாலதண்டாயுதபானி திருக்கோயிலில் இந்த வருட தைப்பூச விழாவும் பக்தர்கள் சூழ விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தக் கோயிலில் அருள்ஜோதி என்ற சாமியார் நீண்ட காலமாக பூசாரியாக பணியாற்றி வருகிறார்.தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியாரான அருள்ஜோதி மீது மார்பு மீது உரக்கல் வைத்து அரிசி இடித்து மாவாக்கப்பட்டது. மேலும்,கண்ணை கலங்க வைக்கும் காய்ந்த காரமிளகாயை அரைத்து, அந்த கரைசலை பக்தர்கள் எதிரிலேயே அருள்ஜோதி மீது அபிஷேகம் செய்யப்பட்டது.அப்போது ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ என விண்ணைப் பிளக்கும் பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மூலவரான பாலதண்டாயுதபானி முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.தைப்பூசத்திற்கு முருக பக்தர்கள் பலர் பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்து வரும் நிலையில்,செஞ்சியை அடுத்த அருள்ஜோதி சாமியாரின் மிளகாய் அபிசேகம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.