மட்டக்களப்பில் பொழியும் கனமழை.!! வெள்ளக் காடாக மாறிய வீதிகள்.!! பொதுமக்கள் பெரும் அசௌகரியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மணி நேரமாகத் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தாழ் நிலப்பகுதிகள் உட்பட நகரப் பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இன்று மட்டக்களப்பு,கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகரப் பகுதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.இதனால், வாகனப் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. சிறிய ரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையிருந்தது. அதேவேளை, ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸாரும், நகர சபை ஊழியர்களும் பயணிக்கும் வாகனங்களைப் பாதுகாப்பாக அனுப்புவதில் ஈடுபட்டிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து எட்டு மணித்தியாலமாகப் பெய்த கனமழையினால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மானி அளவு கருவி பொருத்தப்பட்டுள்ள மயிலம்பாவெளியில் 218 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், மட்டக்களப்பு நகரத்தில் 118.1 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், நவகிரியில் 8.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 52.7 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சையில் 23 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 88.3 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவில் 11 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 43 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 88.2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 80 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.