உலகளாவிய ரீதியில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையின் நிலை..!! வெளிவந்த புள்ளி விபரம்.!

உலகில் ஆகக் குறைவான ஊழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 94வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.உலகளாவிய ஊழல் எதிர்ப்பு இயக்கமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் வெளியிட்ட 2020 ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 தொடக்கம் 100 வரையான புள்ளிகளுடன் நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் 180 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் ஊழல் தொடர்பில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.டென்மார்க்கும் நியூசிலாந்தும் 88 புள்ளிகளைப் பெற்று இதில் ஆக உயரிய இடத்தை வகித்துள்ளன.இந்தப் பட்டியலில் சிறந்த பத்து இடங்களில் இடம்பெற்ற ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. 85 புள்ளிகளுடன் அது மூன்றாமிடத்தை பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்துள்ளது.நோர்வே 7, நெதர்லாந்து 8, ஜேர்மனி, லக்ஸ்சம்பேர்க் 9, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா,ஹொங்கொக் 11ஆம் இடங்களை பெற்றுள்ளன. இந்தியா 86வது இடத்தில் உள்ளது.சிரியா, சோமாலியா மற்றும் தெற்கு சூடான் முறையே 14, 12 மற்றும் 12 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளன.2012 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கணிப்பீட்டு முறையில், ஈக்வடோர் (39), கிரீஸ் (50), கயானா (41), மியான்மர் (28) மற்றும் தென் கொரியா (61) உள்ளிட்ட 26 நாடுகள் மதிப்பெண்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளன.பொஸ்னியா & ஹெர்சகோவினா (35), குவாத்தமாலா (25), லெபனான் (25), மலாவி (30), மோல்டா (53) மற்றும் போலந்து (56) உள்ளிட்ட இருபத்தி இரண்டு நாடுகள் தங்கள் மதிப்பெண்களைக் கணிசமாகக் குறைத்துள்ளன.94வது இடத்தை இலங்கையுடன், எதியோப்பியா, கஜகஸ்தான், பிரேசில், பெரு, தன்சானியா, சூரினாம் ஆகிய நாடுகள் பகிர்ந்துள்ளன.கொவிட்-19 பரவல் நிலவிய சூழலில் ஊழலைச் சமாளிக்க பல்வேறு உலக நாடுகள் திணறியதாகவும், இப்பட்டியலின் உயரிய நிலையில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள், தங்களது சுகாதாரக் கட்டமைப்பில் கூடுதலாக முதலீடு செய்து வருவதாகவும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் அமைப்பு தெரிவித்தது.கொவிட்-19 போன்ற பெரும் நெருக்கடி காலகட்டத்தில் பொதுநிதி ஊழலில் விரயமாவது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.