பொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்..வடக்கில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரானா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் 26 பேருக்கும், மன்னாரில் 23 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வவுனியா பட்டாணிச்சூரில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து, வவுனியா நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தோருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளியாகும் நிலையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. அதில் 20 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வவுனியா பசார் வீதியைச் சேர்ந்தவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த 6 பேருக்கும், மன்னாரைச் சேர்ந்த 23 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மன்னாரில் தொற்றுடன் இனங்காணப்பட்டவர்கள், தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது,யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் சாலையில் பணியாற்றும் இவர், விடுமுறையில் வீடு வந்திருந்தார். அவருடன் பணியாற்றும் ஒருவருக்கு புத்தளத்தில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.