அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜோ பிடன்..!! கோலாகலமாக நடந்த பதவியேற்பு நிகழ்வு..!!

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பிடன் முறைப்படி இன்று பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றிபெற்றார். ஆனால் அவரது வெற்றியை ஏற்க மறுத்து பல்வேறு களேபரங்களை அரங்கேற்றி வந்தார் டிரம்ப்.இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியான இன்று அமெரிக்காவின் மரபுப்படி மிகச்சரியாக நண்பகல் 12 மணிக்கு ஜோ பிடன் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வலது கையை உயர்த்தியும் இடது கையை பைபிள் மீது வைத்தும் பதவியேற்றுக்கொண்டார் ஜோ பிடன்.ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்துகொள்ளாத நிலையில் குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் புஷ் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு பிடனுக்கும் புதிய நிர்வாகத்துக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.இதேபோல் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதுடைய ஒருவர் (78 வயதில்)அதிபராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றுள்ளார்.அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அதேபோல துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் அடுத்த 4 ஆண்டுகாலம் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள் குறித்த முகவுரையை ஏற்புரையாக நிகழ்த்தி வருகிறார் ஜோ பிடன்.பிடன் பதவியேற்பு விழா நடைபெற்ற வாஷிங்டன் டிசியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 25,000 போலீஸார் பதவியேற்பு விழா அரங்கை சுற்றி பாதுகாப்பு அரணாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிக்கைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.