தமிழர் பாரம்பரிய கலாச்சாரங்களுடன் அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாகும் ஜோ பைடனை வரவேற்கத் தயாராகும் அமெரிக்கர்கள்!!

அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று அமெரிக்கர்கள் கோலமிட்டுள்ளனர்.

வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம், அமெரிக்காவின் அதிபர் பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நாளை(20) பதவி ஏற்கிறார்கள்.இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் (இணைய) முயற்சியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 1,800இற்கும் மேற்பட்ட நபர்களும், இந்தியாவில் இருந்தும் பலர் பங்கேற்றனர்.

புதிய நிர்வாகத்துக்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வரும் கோலங்களை வெள்ளை மாளிகையின் முன் காட்சிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது.இருப்பினும், வோஷிங்டனில் எதிர்பாராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டதால், இந்த அனுமதி ரத்துச் செய்யப்பட்டது.இதன் விளைவாக, பைடன் மற்றும் ஹாரிஸை ‘அனைவருக்குமான ஜனாதிபதி’ என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும், அமெரிக்காவின் பல கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், நேற்று முன்தினம் கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு காணொளியாக உருவாக்கப்பட்டது.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் ஒளிபரப்பப்படும் காணொளிக் காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான கோலங்கள், காட்சிப்படுத்தப்படவுள்ளன.உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கோலங்கள் போடப்பட்ட ஓடுகளை காட்சிப்படுத்துவதற்கான இடமும், நாளும் தீர்மானிக்கப்படும் என்று ‘கோலம் 2021′ ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.