சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்!! வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..!

பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறையினரால் சீல் வைக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது, இயங்கிய திரையரங்கே, பருத்தித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான குழுவினரால் மூடப்பட்டுள்ளது.பருத்தித்துறைப் பகுதியில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் இனங்காணப்பட்டு, அவர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணிய இருபத்தைந்துக்கு மேற்பட்டவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.ஆகவே அவர்களுக்கான பி.சி.ஆர்.முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், திரையரங்கை பருத்தித்துறையில் திறக்கவேண்டாம் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைபெற்று, பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியாலும் பொதுசுகாதார பரிசோதகராலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.அந்த அறிவுறுத்தலை மீறி, அங்கு சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் ஒன்றுகூட இடமளிக்கப்பட்டுள்ளது.அதனாலேயே, திரையரங்கு சீல் வைக்கட்டு மூடப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்