நினைவுத் தூபி அடிக்கல் நாட்ட முயன்ற துணைவேந்தரையும் தடுத்து நிறுத்த முயன்ற பொலிஸார்!!

யாழ்ப்பாணப் பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் மாணவர்களின் போராட்டக்களத்திற்கு சென்ற துணைவேந்தர், அடிக்கல் நாட்ட தயாராக இருப்பதாகவும், காலை 7 மணிக்கு அடிக்கல் நாட்டலாமென்றும் தெரிவித்திருந்தார்.அதன்படி காலையில் அடிக்கல் நாட்ட துணைவேந்தரும், மாணவர்களும் சென்ற போது, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் அவர்களை மறித்தனர்.இதன்போது, தனது மாணவர்கள் 3 நாட்களாக பட்டினியுடன் இருப்பதாகவும், அவர்களின் போராட்டத்தை நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பு தனக்குள்ளதாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.இதையடுத்து பொலிசார் விலகிக் கொண்டனர்.அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் மாணவர்களின் பெயர் விபரங்களை பொலிசார் பதிவு செய்ய முயன்றனர்.எனினும், துணைவேந்தர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால், பதிவு செய்யும் நடவடிக்கையை பொலிசார் கைவிட்டனர்.