அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்திருக்க வேண்டும்!அங்கஜன் கண்டனம்

யாழில் நினைவுத் தூபி இடிப்புச் சம்பவத்தில் அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது. ஓர் நினைவுத் தூபியை அழிப்பதென்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறியுள்ளது.

கடந்த கால அரசியல் தலைமைகள் நினைத்திருந்தால் தூபிக்கான அனுமதியை அன்றே பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.

அனுமதி என்ற விடயத்தில் அன்று விடப்பட்ட தவறு இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நினைவுச் சின்னம் இன மத பேதங்களுக்கு அப்பால் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுவான ஒன்று.

நினைவுத்தூபியை இடிக்க வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கல்விச் சமூகத்தால் தெரிவிக்கப்படவில்லை.

அடையாளச் சின்னம் அழிக்கப்பட்ட பின்னரே இவ் விடயம் தொடர்பில் எம்மால் அறிய முடிந்தது. இது தொடர்பில் முன்பாகவே எமக்கு தெரியப்படுத்தியிருந்தால் இன்று அந்த தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் அழிவின்றி இருந்திருக்கும்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து இளைய சமுதாயம் திசை மாறிச் செல்வதனையும், இனங்களுக்கிடையே முரண்பாடுகள் வளர்க்கப்படுவதனையும் அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும்” என குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.