24 மணித்தியாலத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள்.!! கிழக்கில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..!!

கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மகாணத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.இன்று (8) மட்டக்களப்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது;

கிழக்கு மாகாணத்தில் இன்று காலை வரை 1493 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில் மூதூர் பகுதி ஐந்து பேர், தம்பலகாமத்தில் ஒருவர், திருகோணமலையில் 4 பேர், கல்முனை தெற்கு 8 பேர், சாய்ந்தமருது ஒருவர், நிந்தவூர் பகுதி 5 பேர், ஏறாவூர் பகுதி 3 பேர், மட்டக்களப்பு நகரம் ஒருவர், காத்தான்குடி 20 பேர், வெல்லாவெளி பகுதி ஒருவர், அம்பாறை பகுதியில் 2 பேர், உகணப்பகுதியில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் கொரோனா மரணம் 9 ஆக உயர்ந்துள்ளது. அம்பாறை உகண பகுதியைச் சேர்ந்த ஒருவர் 9வது நபராக மரணமடைந்துள்ளார். அவர், சிறுநீரக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.இந்தக் கிழமை கிழக்கில் சிவப்பு வளையங்களாக காத்தான்குடி, திருகோணமலை நகரம், கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, உகன, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்தில் மூன்று பிரதான பகுதிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கல்முனை நகரத்தில் சில கிராம சேவகர் பிரிவுகள், மட்டக்களப்பில் காத்தான்குடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரத்தில் சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இந்தப் பகுதி மக்கள் எவ்வாறு சுகாதார அதிகாரிகளிற்கு ஒத்துழைக்கிறார்கள் என்ற வகையிலும், தொற்று எவ்வாறு வியாபித்துள்ளது என்ற வகையிலும் தனிமைப்படுத்தல் நீடிக்கும் காலம் தீர்மானிக்கப்படும்.