உடன் அமுலுக்கு வரும் வகையில் வடக்கில் மீன்பிடிக்கு தற்காலிகத் தடை விதிக்கக் கோரி மனு..!!

யாழ். மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறைப் வரையான பகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் அனைத்து மீன்பிடி செயற்பாடுகளையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக தடை விதிப்பதற்கான உத்தரவை தாமதிக்காது உரிய தரப்பினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் மேலும்,

உலகளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்களை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளை அரசு முன்னெடுத்து வருகின்றது.அதில் ஒரு அம்சமாகவே நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் குறித்த ஊரடங்கு சட்ட நோக்கத்தை முழுமைப்படுத்த முடியாத வகையில் மீன்பிடி செயற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.

அதாவது யாழ். மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான கரையோரப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் தமது மீன் பிடி செயற்பாடுகளை வழமை போன்று தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் ஊரடங்கின் போதும் மக்கள் அதிகளவில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் இவ் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், ஒரு மரணமும் பதிவாகியிருக்கின்ற இக்கால கட்டத்தில் மாநகர கரையோரப் பகுதி மீன்பிடி செயற்பாடானது எமது மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாகவும், எதிர்பார்க்காத வகையில் பாரிய வைரஸ் தொற்று விளைவுகளையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடும் என்று அச்சம் கொள்ள வைக்கின்றது.

எனவே, யாழ். மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறைப் வரையான பகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துவிதமான மீன்பிடிசெயற்பாடுகளையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக தடைவிதிப்பதற்கான அறிவுறுத்தல்களை தாமதிக்காது உரிய தரப்பினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.