இதுவரை 360 பேருக்கே கொரோனா பரிசோதனை.!! யாழில் சமூகத் தொற்று இல்லையென மறுக்க முடியாது!-வைத்திய கலாநிதி காண்டீபன்..

யாழ்ப்பாணத்தில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என்று யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் கூறியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது; யாழ்ப்பாணத்தில் சமூக தொற்று ஏற்படவில்லை எனவும், வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகரினாலேயே குறித்த கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், கொரோனா தொடர்பில் பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் வடக்கு சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணமாக நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளன.கொழும்பில் நேற்று, நேற்று முன்தினம் ஏற்பட்டுள்ள தொற்றுகள் அனைத்தும் நோய் அறிகுறி இல்லாது ஏற்பட்ட தொற்றாகவே நாம் பார்க்கின்றோம்.எனினும், யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் இன்று வரை 360 பேர் வரை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளோம்.இந்த பரிசோதனையானது மூன்று, நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் வரை யாரும் யாழ்ப்பாணத்தில் சமூகத்தொற்று இன்னும் ஏற்படவில்லை என்பதை கூற முடியாது.எனவே, நாங்கள் வடக்கிலுள்ள சுகாதார திணைக்களத்தினரிடம் கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றோம்.யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதபோதகருடன் தொடர்பு பட்ட நபர்களுக்கே கொரோனா பரிசோதனையை இன்றுவரை மேற்கொண்டுள்ளோம்.ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் பரிசோதனையை மேற்கொண்டு விட்டு நாம் சமூகத்தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது.எனினும், யாழ்ப்பாணத்தை பொருத்தவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் நிறையவே உள்ளார்கள். அவர்கள் தொடர்பில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக உள்ளது. எனவே, வடக்கில் கொரோனா பரிசோதனையை இரண்டு மூன்று மடங்காக அதிகரித்து அந்த பரிசோதனை முடிவில் பின்னரே நாம் சமூகத்தொற்று உள்ளதா இல்லையா என்பதை பரிசீலிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.