நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைதான சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணை!!

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனங்களின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று மாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபா, பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில், அவர்களை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சந்தேகநபர்களின் வௌிநாட்டு பயணங்களை தடை செய்த நிலையில் அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோல், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.13.7 மில்லியன் ரூபாய் வைப்பு பணத்தை சட்டவிரோதமாக ஏற்றுக் கொண்டமை, முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.