கொரோனாவினால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பல்!

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.அதன்படி இவர்கள் ஒன்பது விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 245 பேர் தொழில்வாய்ப்புக்காக கட்டார் நாட்டிற்குச் சென்று கொரோனா பரவலால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் விமான நிலையத்தின் மருத்துவ ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவச பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரச தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ஏனைய இலங்கையர்கள் வேறு பல நாடுகளிலிருந்து நாட்டுக்கு இக்காலக் கட்டத்தில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.குறித்த அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கொழும்பில் உள்ள பல தனியார் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களால் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.