கொவக்ஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கோவக்ஸ் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி முன்வைத்த குறித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையும் இக் கொவக்ஸ் செயன்முறையில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், கொவக்ஸ் வசதிகள் மூலம் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தியோகபூர்வ அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான தகைமையை எமது நாடு கொண்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் உள்ளடங்கலாக, GAVI நிறுவனம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.குறித்த தடுப்பூசி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இரண்டு படிமுறைகளின் கீழ் விண்ணப்பங்களை கோருமாறு நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இலக்குக் குழு மற்றும் தடுப்பூசியைக் களஞ்சியப்படுத்தும் இயலளவு தொடர்பாக தொழிநுட்பத் தகவல்கள் உள்ளடங்கிய தடுப்பூசி விண்ணப்பத்தின் முதலாம் மற்றும் A பகுதி 2020 திசம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததுடன்,இலங்கை குறித்த விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பித்துள்ளது.அதன் இரண்டாம் பகுதியான தடுப்பூசி பெறல் மற்றும் அதற்கமைவான முற்காப்பீட்டு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்காக 2021 சனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கமைய, சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி கொவக்ஸ் இற்கான தடுப்பூசி விண்ணப்பத்தின் B பகுதியை சமர்ப்பிப்பதற்கும், கொவக்ஸ் வசதிகள் மூலம் தடுப்பூசி வகைப்பிரித்து வழங்கும் பட்சத்தில் குறித்த தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.