கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்…?

கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஏனெனில் இது வயது, பாலினம் மற்றும் ஒருவரது உடல்நலப் பிரச்சனைகளையும் சார்ந்ததாகும்.சிலர் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்ற சிலருக்கு இது நீண்டகால பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் .எந்தளவிற்கு எவ்வளவு காலம் இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்களோ, அதையும் பொறுத்தே எப்போது குணமடைவீர்கள் என்பது இருக்கிறது என்று சொல்லப்படுகின்றது.கொரொனா பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு முதலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்கு இந்த அறிகுறிகளோடு, உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகியவையும் தென்படும்.ஆரம்பத்தில் வறட்டு இருமலே இருந்தாலும், போகப்போக சிலருக்கு சளி வரத்தொடங்கும். இதன்போது அதிக நீராகாரங்களை எடுத்துக் கொள்வது, நல்ல ஓய்வு மற்றும் பாராசிடமால் போன்ற மாதிரைகளை கொடுத்து இதனை சரிசெய்ய முடியும்.எனவே, லேசான அறிகுறிகள் இருப்பவர்கள், விரைவாக குணமடைந்துவிடுவார்கள். இருமல் சரியாக சற்று நீண்ட காலம் ஆகலாம் என்றாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரியாக இரண்டு வாரங்களுக்குள் இத்தொற்றிலிருந்து மீண்டுவிடுவார்கள் என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.