தமது 8வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட மனைவிக்கு கணவன் கொடுத்த உலகில் மிகப் பெறுமதி வாய்ந்த திருமணப் பரிசு.!!

நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா. எனது எட்டாவது திருமண ஆண்டில் ஏதாவது வித்தியாசமாக எனது மனைவிக்கு பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். எல்லோரும் மனைவிக்கு பரிசு என்றால் நகை, கார்கள், வீடு என நினைப்பார்கள். நான் வித்தியாசமாக நிலவில் நிலம் வாங்கித்தர விரும்பினேன்” என்கிறார் தர்மேந்திர அனிஜா.நியூயார்க்கின் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார் அனிஜா. “நிலம் வாங்கும் நடைமுறைகளை முடிக்க எனக்கு சுமார் ஓராண்டாகியது. கடைசியில் நினைத்தது போலவே நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி விட்டேன், என்கிறார் அனிஜா.எட்டாவது திருமண நாளில் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர அனிஜாவின் மனைவி சப்னா, “திருமண நாளில் இப்படி ஒரு பரிசை எனது கணவர் வழங்குவார் என நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. மிகப்பெரிய அளவில் நிலவில் நிலம் வாங்கிய ஆவண சான்றிதழின் படத்தை பிரேம் செய்து எனக்கு பரிசாக எனது கணவர் வழங்கினார்,” என்கிறார் பூரிப்புடன்.

இப்படியொரு சிந்தனை எப்போது வந்தது என்று தர்மேந்திராவிடம் பிபிசி செய்தியாளர் கேட்டபோது, “ஓராண்டுக்கு முன்பே இதற்காக நான் திட்டமிட்டேன். நிலவில் நிலம் வாங்கி அதை மனைவிக்கு பரிசாக தருவது எளிதானதாக இருக்காது என எனக்குத் தெரியும். அது எளிதாக இருந்திருந்தால் யார் வேண்டுமானாலும் அதை வாங்கியிருப்பார்கள்,” என்று பதிலளித்தார்.நிலவில் தர்மேந்திராவின் நிலம் எங்கு உள்ளது?
சப்னா பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலம், நிலவில் 14.3 வடக்கு அட்சரேகை, 5.6 கிழக்கு தீர்க்க ரேகை என்ற பகுதியில் உள்ளதாக அவருக்கு நிலத்தை விற்கும் சான்றிதழ் வழங்கிய அமைப்பு கூறியுள்ளது.

யார் இந்த தர்மேந்திர அனிஜா?-ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை பூர்விகமாகக் கொண்டவர்கள் தர்மேந்திர் அனிஜா மற்றும் சப்னா அனிஜா. அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தனர். அஜ்மீர் அரசு கல்லூரியில் படித்தபோது இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 7 வயதில் ரிதி என்ற பெண் குழந்தை உள்ளது.திருமணத்துக்குப் பிறகு பிரேஸிலில் தான் கவனித்து வரும் சுற்றுலா தொழிலில் ஈடுபட தர்மேந்திர அனிஜா சென்றார். இவரது பெற்றோர் அஜ்மீரிலேயே வசித்து வருகிறார்கள். தர்மேந்திராவின் தந்தை ஒரு கட்டட கான்ட்ராக்டர். சப்னாவின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்.கடந்த 10 மாதங்களாக குடும்பத்தாருடன் அஜ்மீரில் வசித்து வரும் தர்மேந்திரா, வீட்டில் இருந்த வேளையில், மனைவிக்காக வித்தியாசமாக சிந்தித்து அதை செயல்வடிவத்தில் நிகழ்த்தும் காட்டியிருப்பதால் ஊடகங்களின் வெளிச்சத்துக்கும் வந்திருக்கிறார்.நிலவில் நிலம் வாங்க என்ன செய்ய வேண்டும்?-பூமியில் நிலம் வாங்க ஏராளமான விதிமுறைகள் இருப்பது போலவே நிலவில் நிலம் வாங்கவும் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. ஆனால், நிலவில் மனை விற்பனை செய்து தருவதாகக் கூறும் ஏராளமான போலி நிறுவனங்கள் இருப்பதால், சரியான நிறுவனத்தை கண்டறிவது மிகவும் கடினமான விஷயம்.தர்மேந்திரா அனிஜா, ஓராண்டுக்கு முன்பு நியூயார்க்கின் லூனார் அமைப்பிடம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தார். அதன் பிறகு அவரிடம் காணொளி வாயிலாக பல்வேறு முறை நேர்காணல்கள் நடத்தப்பட்டன.அவரது நிதிநிலைமை குறித்தும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நடைமுறைகள் முடிவடையவே கிட்டத்தட்ட ஓராண்டாகியது.உலக அளவில் நிலவில் வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல்தான் என்கிறார் தர்மேந்திர அனிஜா.நிலவில் இரு வகை நிலங்கள் விற்கப்படுகின்றன. முதலாவதாக, ஓராண்டுக்கு குத்தகைக்கு தரப்படும் நிலங்கள். மற்றொன்று 49 ஆண்டுகளுக்கான குத்தகை.இதில், தர்மேந்திரா வாங்கியிருப்பது 49 ஆண்டுகளுக்கான குத்தகை. இடைப்பட்ட ஆண்டில் இந்த நிலத்தை வேறு யாருக்கு வேண்டுமானாலும் அவரது மனைவி சப்னா நிலத்தை மாற்றிக் கொள்ளலாம்.இதேபோல், தர்மேந்திரா வாங்கிய நிலத்தில் ஆராய்ச்சி செய்ய விண்வெளி அல்லது நிலவில் ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் விரும்பினால், அதற்குரிய ராயல்டி தொகை தர்மேந்திராவுக்கு அந்த ஆய்வு நிறுவனம் வழங்க வேண்டும்.நிலவில் நிலம் வாங்கிய நிகழ்வையும் அதை தனது மனைவிக்கு பரிசளிக்கும் விதமாக திருமண நிகழ்வை கொண்டாட வேண்டும் என்றும் கூறி தர்மேந்திர அனிஜா, உள்ளூரில் பிரபலமான ரஷி என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவன இயக்குநர் கோஷினோக் ஜெயினை அணுகினார்.ஆனால், அவரது பேச்சை கேட்டு முதலில் சந்தேகம் அடைந்த அவர், தர்மேந்திரா காண்பித்த 17 பக்க ஆவணங்களை பார்த்த பிறகே இது உண்மையிலேயே வித்தியாசமான நிகழ்ச்சிதான் என்பதை புரிந்து கொண்டார்.”நிலவில் இருப்பது போலவே ஒரு காட்சி அமைப்பை உருவாக்க தர்மேந்திரா விரும்பினார். அந்த காட்சிக்கு மத்தியில் தனது மனைவிக்கு நிலத்தை பரிசளிக்க அவர் விரும்பியதால் அதற்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்தோம்,” என்கிறார் கோஷினோக் ஜெயின்.இந்த காட்சிக்காக மேகம், நட்சத்திரங்கள் மின்னுவது போல காட்ட எல்இடி விளக்குகளை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பயன்படுத்தினார்கள். காதல் தம்பதிக்கு மட்டுமின்றி, அவர்களை வாழ்த்த வந்த விருந்தினர்களும் நிலவில் இருப்பது போன்ற உணர்வை இந்த நிகழ்வில் பெற்று மறக்க முடியாத அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள்.

 

நன்றி: BBC NEWS