மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 4000 மில்லியன் ரூபா செலவாகும்..!! புதிய தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்..

மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வு காணப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதாயின் சுமார் 4,000 மில்லியன் ரூபா செலவாகும் என நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் மஹா சங்கத்தினரின் வேண்டுகோள் உள்ளிட்ட நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கோவிட் 19 தொற்று பரவலின் நிலைமை, புதிய தேர்தல் முறையொன்று தயாரிக்கப்படும் வரையும், மற்றும் மஹா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்புகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை பிற் போடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்அமைச்சு அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மாகாணசபை முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டுமென்ற ஒரு கருத்து நாட்டில் பரவியிருக்கிறது. இன்னும் சிலர் மாகாணசபை முறைமை இருக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். எனினும் இந்த சந்தர்ப்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது உசிதமாக இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறோம்ஏனெனில், கோவிட் 19 பரவல் நிலைமை மற்றும் இதனூடாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களை நாம் முன் வைத்தோம்.அத்துடன் புதிய தேர்தல் முறையொன்றின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டினோம். அரசுக்கு ஆதரவான குழுக்களும் மஹா சங்கத்தினரும் கூட மாகாணசபைத் தேர்தலை பிற்போடுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.இந்த விடயங்கள் அனைத்தையும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடினோம். இதன்படியே இறுதி தீர்மானமாக மாகாணசபைத் தேர்தலை திகதி குறிப்பிடப்படாது பின் போடுவதென கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.