சுகாதார விதிமுறைகளை மீறி வவுனியாவில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!! சுகாதாரப் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100ற்க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டல பூஜை சுகாதார பிரிவினரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
நேற்று (28) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கார்த்திகை மாதம் ஐயப்பன் விரதம் ஆரம்பமாகி மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 நாள் விரதத்தை அனுஸ்டிப்பார்கள்.அந்த வகையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் நேற்று இரவு மண்டல பூஜை இடம்பெற்றது.இவ் மண்டல பூஜையில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த எட்டியாந்தோட்டை பகுதியியைச் சேர்ந்த 23 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இவ்விடயம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து இவ்விடயத்திற்கு விரைந்த இரு தரப்பினரும் பூஜையை இடைநிறுத்தியிருந்ததுடன், அங்கு கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்தனர்.சுகாதார விதிமுறைகளை மீறி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வெளிமாவட்டத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட 100ற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமையால், அவர்களை தனிமைப்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ.விக்டர்ராஜ் பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடி சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு மேற்கொள்ள அனுமதி கோரிய போதும், வெளிமாவட்டத்தில் இருந்து பலர் கலந்து கொண்டமையால், அனுமதி வழங்க சுகாதாரப் பிரிவினர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.