இறந்த பின்பும் கர்ப்பப் பையிலிருந்து அகற்றப்படாத குழந்தை..மருத்துவமனையில் அசண்டையீனத்தால் பரிதாபமாகப் பலியான பெண்..!!

கருப்பையில் இருந்த குழந்தை இறந்ததால் கர்ப்பிணி பெண்ணொருவர் பரிதாபச் சாவடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு தனியார் மருத்துவமனை காட்டிய அலட்சியத்தன்மையே காரணம் எனத் தெரியவந்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சரத்பாபு என்பவருடைய மனைவியான கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர்கே சாலையில் உள்ள ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.கர்ப்பிணியாகி 10 மாதம் ஆகியதால், குறித்த தம்பதி அந்த மருத்துவரை பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது என்றும் ஸ்கேன் எதுவும் எடுக்க தேவையில்லை என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

எனினும், குழந்தையின் அசைவுத் தன்மைகள் இன்மையால் கடந்த செவ்வாய் கிழமை ஸ்கேன் எடுத்து பார்த்த போது, குழந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையே இறந்துவிட்டது தெரியவந்தது.இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சரத்பாபு உடனே மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள இசபெல்லா என்ற தனியார் மருத்துவமனைக்கு, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு, இறந்த குழந்தையை வெளியில் எடுக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இசபெல்லா மருத்துவர்கள், குழந்தையை சுகப்பிரசவத்தில் எடுக்க முடியும் என்று கூறி நாட்களை கடத்தி வந்துள்ளனர்.ஆனாலும் வயிற்றில் இறந்த குழந்தை தொடர்ந்தும் இருந்ததன் காரணமாக, கனிபொழிக்கு தொற்று ஏற்பட்டதாகவும், இதனால் அவர் இன்று காலை உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டது.இதைக் கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள், கனிமொழியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் சிகிச்சை கட்டணமாக 3 லட்சம் ரூபாயை கட்டச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதால், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மயிலாப்பூர் பொலிசார் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கனிமொழியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தனர்..மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தபடும் என்றும் பொலிசார் சார்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.