கேட்பதற்கு எவருமின்றி 10 வருடமாக தெருவில் அழுக்குடன் சுற்றித் திரிந்தவரின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரேயொரு புகைப்படம்..!!

பிரேசிலில் பத்து ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டை விட்டு பிரிந்த நிலையில், சாலையோரம் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து கடந்த பத்து ஆண்டுகள் அந்த நபர் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், ஆண்கள் பேஷன் ஸ்டோர் மற்றும் முடி திருத்தும் நிலையம் நடத்தி வரும் அலெசான்ட்ரா லோபோ என்பவர், ஆதரவற்ற அந்த நபரிடம் உணவு ஏதேனும் வேண்டுமா என கேட்டுள்ளார்.

அப்போது உணவு வேண்டாம் என அந்த நபர் தெரிவித்த நிலையில், முடி மற்றும் தாடி ஆகியவை புதர் போல வளர்ந்து இருந்ததால் அதனை அகற்ற அலெசான்ட்ரா லோபோ முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து அழுக்கு உடை, நீண்ட தாடியுடன் இருந்த அந்த நபர், முடி திருத்தும் செய்ததும் புத்தம் புது ஆளாக மாறிவிட்டார். அத்துடன் வீடில்லாமல் திரிந்த அந்த மனிதருக்கு சில ஆடைகளையும் லோபோ கொடுத்துள்ளார்.அத்துடன், அந்த நபரின் பழைய புகைப்படம் மற்றும் புதிய புகைப்படம் ஆகியவற்றை இணைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் உலகளவில் வைரலான நிலையில், அந்த வீடற்ற மனிதரின் உறவினர்கள் கவனத்திற்கும் சென்றுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு அந்த நபர் வெளியேறியிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவர் இறந்திருக்கலாம் என கருதியுள்ளனர்.இந்தப் பதிவை பார்த்ததும், உடனடியாக அவர்கள் அலெசான்ட்ரா லோபோவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.இதுகுறித்து, ‘உணவு வேண்டுமா என கேட்ட போது அதை அவர் மறுத்ததால் அவரை ஸ்டைலாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தோம். அவர் பேசும்போது மிகவும் கூச்ச சுபாவமுள்ள நபராக இருந்தார்.

முடியை சரி செய்து அவரை புதிய ஆளாக மாற்றிய பின் அவரது பழைய மற்றும் புதிய புகைப்படங்களை இணைத்து பதிவிட்டதும் அவரது குடும்பத்தினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர்.அவரிடம் தொலைபேசி மற்றும் முகவரி இல்லாததால் அவரை இணைந்து கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளோம். அவருக்கு உதவி செய்து அவரை ஆள் அடையாளம் தெரியாமல் மாற்ற வேண்டும் என நினைத்த போது இப்படி ஒரு நல்ல காரியம் ஒரு குடும்பத்தினருக்கு செய்யப் போகிறேன் என ஒருபோதும் நினைக்கவில்லை’ என நெகிழ்ச்சியுடன் அலெசான்ட்ரா குறிப்பிட்டுள்ளார்.பத்து வருடங்களாக தனியாக சுற்றி வந்த நபரை சமூக வலைத்தளம் மூலம் அடையாளம் கண்டுள்ள நிலையில், விரைவில் அவரை கண்டுபித்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.