போரில் கணவனை இழந்து நின்ற போதும் தமது சிறந்த ஆற்றலினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் தொழிலதிபரான தமிழ்ப் பெண்மணி!!

இலங்கையில் நடந்த கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த கொடிய உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனதும் பல்லாயிரக்கணக்கானமக்கள் அவயவங்களை இழந்து அங்கவீனர்கள் ஆனதும் உலகறிந்த வரலாறு. போர் முடிவடைந்த பின் யுத்தத்தில் தமது கணவன்மாரை இழந்து விதவைகள் ஆகி தமது குடும்பங்களை கரைசேர்க்க முடியாமல் அல்லல்படுவதும் தெரிந்த விடயங்கள்.

குறிப்பாக இலங்கையின வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிகவும் அதிகம். ஆனால், இந்தப் பெண்கள் வீரமும் துணிச்சலும் விவேகமும் நிறைந்தவர்கள்.தமது பிள்ளைகளின் வருங்காலத்திற்காக துணிந்து இறங்கி தமக்கு தெரிந்த அனைத்து விதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்.அவர்களில் ஒருவர் தான் இங்கு நாம் பார்க்கப் போகும் சாஜிராணி என்ற பெண்மணி. தம்மிடம் இருக்கும் சிறந்த ஆற்றலினால் சொந்தமாக பல தொழில்முயற்சிகளையும் செய்துள்ளதுடன், இன்று அவர் கணவனை இழந்து தவிக்கும் பல பெண்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் நல்லதொரு தொழில் தருனராகவும் விளங்குகின்றார்.இன்று இவரிடம் பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இவரின் சொந்த தொழிற்சாலையில் பணிபுரிவதுடன் தமது குடும்பங்களையும் நல்லபடியாக காப்பாற்றி வருகின்றனர்.ஆரம்பத்தில் அப்பம் சுட்டு வாழ்க்கை நடத்திய போரில் கணவனை இழந்த சாஜிராணி என்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் இன்று தனது முயற்சியால் “சது ஸ்டார்”என்னும் தொழிற்சாலையை ஆரம்பித்து தன்னைப்போன்ற போரில் கணவனை இழந்த பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோடு Sathu Star (Pvt) Ltd இன் நிரந்தர தொழிற்சாலையை புதுக்குடியிருப்பில் ஆரம்பித்துள்ளார்.இந்தப் பெண்மணியின சிறந்த ஆற்றலினால் தமக்கும் தம்மைச் சுற்றிவாழும் கணவனை இழந்து வாழும் பெண்களுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளதன் மூலம் அவர்களின் நல்லதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் உள்ளார். வாழ்க்கையில் பெரும் சவால்களையெல்லாம் சந்தித்து இன்று வெற்றிக் கொடி நாட்டிஏனைய அனைத்துப் பெண்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் இந்தப் பெண்மணிக்கு எமது அனைவரினதும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.இவரைப் போல நல்ல ஆளுமை மிக்க பெண்கள் எமது தேசத்தில் உருவாகி எமது தேசத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.