கேட்பதற்கு எவருமின்றி மிக மோசமான நிலையில் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்..!! பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் பயணிகள்.!

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் உள்ள கிளிநொச்சி மாவட்ட மத்திய பேரூந்துநிலையம் மிக மிக மோசமான நிலையில் காணப்படுகிறது என பொது மக்களும், பேருந்து உரிமையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பத்து வருடங்களை கடக்கின்ற போதும்,கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேரூந்து நிலையத்தை அமைக்க முடியாத நிலையில் நிலைமை காணப்படுகிறது என்றும் கடந்த காலத்தில் புதிய பேரூந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது
இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்க நிர்வாக மற்றும் அரசியல் தரப்புக்கள் எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கும் பேரூந்து உரிமையாளர்கள்,குறைந்தபட்சம் மழைக்காலங்களில் பயணிகள் சிரமம் இன்றி வந்து செல்வதற்குஏற்ற வகையில், சீரமைத்து தருமாறு கரைச்சி பிரதேச சபையிடமும் நேரடியாக தெரிவித்தும் அவர்களும் அக்கறை எடுக்கவில்லை. மாறாக சுகாதார சீர்கேடுகள் நிறைந்த பிரதேசமாக காணப்படுகின்ற இந்தப் பகுதிக்குள் பிரதேச சபையினரால் புதிய புதிய வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்க்கப்பட்டு வருகிறது.ஆனால், வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு அதற்குள் கழிவுகளும் சேர்ந்து ஒருஅருவருப்பான பிரதேசமாக மாவட்ட பேரூந்து நிலையம் காணப்படுகிறது. பேரூந்து நிறுத்தி பயணிகளை சிரமமின்றி ஏற்றி இறக்க முடியாத பேரூந்து நிலையமாக காணப்படுகிறது. எனவே உரிய தரப்பினர் கூடுதல் கவனம் செலுத்தி, பேரூந்துநிலையப் பகுதியினை தற்காலிகமாகவேனும் சீர் செய்து தருமாறு, கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.