வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டிருந்த யாழ்ப்பாணப் பெண்ணுக்கு கொரோனா..!! 52 பேர் தனிமைப்படுத்தலில்.!!

சண்டிலிப்பாய் நேற்று முன்தினம் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 52 பேர் சண்டிலிப்பாயின் பல இடங்களுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் சண்டிலிப்பாயை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவரின் உறவினர் ஒருவர் மருதனார்மடம் சந்தையில் வர்த்தகம் செய்கிறார். அந்தப்பெண் கடந்த 12ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவுடன் அவருடன் தொடர்புடையவர்களை இனம்கண்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்தனர்.அந்தப் பெண் அரசின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் திகதி வரை இவர் கோப்பாயில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்தப் பயிற்சியில் 52 பேர் பங்கேற்றனர்.பயிற்சியில் கலந்துகொண்ட 52 பேரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அவர்களை சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் தேடிச் சென்றபோது, அந்த 52 பேரும் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை தெரிய வந்தது.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் அவர்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி இருந்தது. இதையடுத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கும் பிரதேச செயலகத்தி்ற்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரின் பிசிஆர் முடிவுகள் கிடைக்காத நிலையில் அவருடன் தொடர்புடையவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அந்த 52 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.