யாழ் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 136 பேரின் மாதிரிகள் மீதான பரிசோதனை முடிவுகள் நாளை..!!

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும்.

இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.அதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள், தொடர்புடையவர்கள் என 394 பேரின் மாதிரிகள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் தலைமையில் இன்று பெறப்பட்டன.இவ்வாறு பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஏனையவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நேற்று அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், பலரது மாதிரிகள் மீளவும் பெறப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படவேண்டும் என்று ஆய்வுகூடத்தால் குறிப்பிடப்பட்டவர்களின் மாதிரிகள் நாளை மீளவும் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.