கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் மட்டும் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு பகுதியின் எல்லையான பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் அங்குள்ள தோட்டங்களில் கொரோனா தொற்று பரவல் குறித்து பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. நேற்று  மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் மட்டும் பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலிருந்து 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அச்சுறுத்தல் மிக மோசமாக அதிகரித்துள்ளது.பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்போரின் சனத்தொகை அதிகம் என்பதனால், அவர்கள் வசிக்கும் சூழல் தன்மைகள் காரணமாகவும் அந்த பகுதியில் கொரோனா மிக வேகமாக பரவியுள்ளதாக நம்புவதாகவும், அதனால் அந்த பகுதியெங்கும் கொரோனா வைரஸை கண்டு பிடிப்பதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்தார்.இந் நிலையில், பண்டாரநாயக்க மாவத்தை தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியோர் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதனை அண்மித்த கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, புதுக்கடை,  வாழைத்தோட்டம், மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் விஷேட சுகாதார மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.இதுவரை பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் மட்டும் மொத்தமாக 57 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  இரவு 7.00 மணியாகும் போது கொழும்பில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 110 ஆக இருந்தது.அதில், அதிக தொற்றாளர்கள் கொழும்பு மத்தி சுகாதார வைத்திய பிரிவான பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இலங்கையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகார பிரிவாக கொழும்பு மத்தி பிரிவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டம் -பேருவளை சுகாதார வைத்திய பிரிவில் 36 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.முதன் முதலாக கொட்டாஞ்சேனை பண்டாரநாயக்க மாவத்தை, 146 ஆவது தோட்டம் பகுதியை சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இந்தியாவுக்கு யாத்திரை சென்று கடந்த மார்ச் 12 ஆம் திகதி நாடு திரும்பி பொலிஸிலும் பதிவு செய்து 14 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு அக்கால எல்லையும் கடந்த நிலையிலேயே, 33 நாட்களின் பின்னர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.இந்த பெண் ஆஸ்தும உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுபவர் எனும் நிலையில், கடந்த 14 ஆம் திகதி அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, கொழும்பு மாநகர சபை அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளிலேயே அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது..இந் நிலையில், அவரது கணவர் மற்றும் மகனுக்கும் கொரோனா தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவரவே, பண்டாரநாயக்கா மாவத்தை முடக்கப்பட்டு அங்கிருந்த பலர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்டதுடன், மேலும் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டனர்.இந் நிலையில், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் சளி மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா தொற்றினை கண்டறிய முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.இந் நிலையிலேயே, இதுவரை பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் 57 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நேற்று பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று காலை 24 தொற்றாளர்களும் பிற்பகல் 8 தொற்றாளர்களும் அடையளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறான பின்னணியில் முதலில் தொற்றுக்குள்ளான பெண்ணின் மகன் மிக நெருக்கமாக பழகிய நண்பரான கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபத்தனாராம வீதியைச் சேர்ந்த ஒருவரும் நேற்று இரவு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.அதனைவிட முதலில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவர் சேவையாற்றும் இடத்தில் உடன் சேவையாற்றிய கொழும்பு 12, போக்குவரத்து பொலிஸ் பிரிவுக்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவரும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.இந் நிலையில், கடற்படையின் புலனாய்வுப் பிரிவு பொலிசார் இராணுவத்தினர் இணைந்து கிராண்ட்பாஸ் மாளிகாவத்தை புதுக்கடை கொட்டாஞ்சேனை பகுதிகளில் இவர்களுடன் நெருக்கமாக பழகிய 20 பேருக்கும் அதிகமானோரை வெலிசறையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.இந் நிலையில், கொழும்பு 12 கோமஸ் குறுக்கு வீதி மற்றும் பண்டாரநாயக்க மாவத்தை பகுதிகளில் வசிக்கும் 50 பேரின் சளி மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக பெறப்பட்டன.குறித்த பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் கூட பிரதான வீதியில் ஆள் நடமாட்டம் இல்லாவிட்டாலும், தோட்டங்களில் ஒன்றாக கூடி கரம் விளையாடி உள்ளதாகவும், உணவுகளை பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.பண்டாரநாயக்க மாவத்தையில் கண்டறியப்பட்டுள்ள 57 தொற்றாளர்களும் அந்த பகுதியில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், அவர்களில் 98 வீதமானோருக்கு எந்த கொரோனா அறிகுறியும் தென்படவில்லை என்பதும் விஷேட அம்சமாகும்.இந் நிலையிலேயே அப்பகுதி எங்கும் கொரோனா தொற்றாளர்களைக் கண்டறிய விஷேட வேலைத் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.