இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கைக்கு வருகை தரும் இங்கிலாந்து அணி..!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆண்டு தொடக்கத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (எஸ்.எல்.சி) உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக மார்ச் மாதத்தில் இலங்கை வந்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் தீவிரமாக பரவத் தொடங்கியதால், அவசரமாக நாடு திரும்பியிருந்தது. அப்போது எதிர்காலத்தில் தொடரை மாற்றியமைப்பதில் இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் ஒப்புக்கொண்டிருந்தன.

இதற்கமைய தற்போது ஜனவரி மாதத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து இலங்கை வருவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் தொற்றுநோயால் ஸ்தம்பித்து போயிருந்த சர்வதேச கிரிக்கெட் மீண்டும் உள்நாட்டில் மலரவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.இதன்படி முதல் டெஸ்ட் போட்டி, ஜனவரி 14 முதல் 18 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 22 முதல் 26 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.முன்னதாக இலங்கை செப்டம்பர் மாதத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு பங்களாதேஷை அழைத்திருந்தது. ஆனால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இணங்க மறுத்ததினால் தொடர் கைவிடப்பட்டது.இங்கிலாந்துக்கு எதிரான இந்த உள்நாட்டுத் தொடர், ஜனவரி 14ஆம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னதாக, இலங்கை டிசம்பர் 26 முதல் ஜனவரி 7 வரை தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது,